சித்த யோகாவின் முக்கியத்துவம்

சித்த யோகப் பயிற்சியானது, ஒரு சாதகரின் ஸ்தூல உடலை (பருவுடல்) தெய்வீக உடலாக (திவ்ய தேகம்) மாற்றுவதற்கு ஒரு முறையான, படிப்படியான வழிகாட்டுதலை வழங்குகிறது. இந்த நிலைகள், உண்மையான ஆர்வம் கொண்ட எந்தவொரு சாதகரும், தனது தனிப்பட்டத் திறன் மற்றும் முதிர்ச்சியின் அடிப்படையில் அடுத்தடுத்த நிலைகளுக்கு முன்னேறுவதை உறுதி செய்கிறது

ஸ்தூல தேகத்திலிருந்து யோக தேகத்திற்கு

இந்த மாற்றத்தின் முதல் படி, ஸ்தூல தேகம் அல்லது பருவுடலை யோக தேகம் அல்லது யோக உடலாக மாற்றுவதற்கான பயிற்சிகளை உள்ளடக்கியது. ஆசனங்கள், பந்தங்கள், முத்திரைகள், பிராணாயாமம், தியானம் மற்றும் தாரணை போன்ற பயிற்சிகளில் இங்கு கவனம் செலுத்தப்படுகிறது. இவை உடலில் உள்ள ஆற்றல் ஓட்டங்களை தூய்மைப்படுத்தவும், உடல் சம நிலையை மேம்படுத்தவும், மன ஒருநிலையை மேம்படுத்தவும், சுவாசத்தை சீராக்கவும் உதவுகின்றன. இவையாவும் ஒரு யோகி அல்லது யோகினிக்குரிய ஒழுக்கத்தை வழங்குகின்றன.

யோக தேகத்திலிருந்து சித்த தேகம்

அடுத்த கட்டம், யோக தேகம் எனப்படும் யோக உடலை, சித்த தேகம் எனப்படும் சித்தி பெற்ற உடலாக மாற்றுவதாகும். உடலில் உள்ள நாடிகள், சக்கரங்கள், குண்டலினி மற்றும் ஆதாரங்கள் சார்ந்த பயிற்சிகளின் மூலம், ஒரு சாதகருக்குள் இருக்கும் குண்டலினி சக்தியை விழிப்படையச் செய்து, அதனை மேல்நோக்கிப் பயணிக்கச் செய்வதன் மூலம் இந்த மாற்றம் நிகழ்கிறது. கீழ்நோக்கி இருந்த ஆற்றல் தற்போது மேல்நோக்கித் திருப்பப்படுகிறது; இது சிந்தனையில் முதிர்ச்சியைத் தருவதோடு, சாதகர்களுக்குப் பல்வேறு சித்திகளை வழங்குகிறது.

சித்த தேகத்திலிருந்து மந்திர தேகம்

அடுத்த கட்டம், சாதனைப் பயிற்சிகளின் மூலம் சித்த தேகத்தை மந்திர தேகமாக மாற்றுவதாகும். இங்கு கவனம் என்பது சித்திகள் அல்லது திறன்களில் இருந்து விலகி ஒரு குறிப்பிட்ட ஒளியுடலை உருவாக்கும், அகப்பயணத்தை மேற்கொள்ளும் நிலைக்கு நகர்கிறது. ஒரு சாதகரின் உடலில் இருக்கும் உண்மையான ஆற்றலை வெளிப்படுத்த, பல்வேறு மந்திர சாதனை முறைகள் பயன்படுத்தப்படுகின்றன. இவை உடலின் குறிப்பிட்ட புள்ளிகளில் ஆற்றலைச் செலுத்தி, அதன் மூலம் பல்வேறு உயர்நிலைச் செயல்களைச் செய்து முடிக்க உதவுகின்றன.

மந்திர தேகத்திலிருந்து திவ்ய தேகம்

இறுதி நிலையானது, அகத் தேடல் அல்லது சுயத்தின் மூலம் மந்திர தேகத்தை, திவ்ய தேகமாக மாற்றுவதாகும். தூய உணர்வாக, சுயத்தை பற்றிய மெய்ஞானத்தை உணரும் பொருட்டு, சமாதியின் பல்வேறு ஆழமான நிலைகளை உள்ளடக்கிய பயிற்சிகள் இங்கு மேற்கொள்ளப்படுகின்றன. இந்த தூய உணர்வை பற்றிய ஞானமானது, ஒரு சாதகரைத் தெய்வீக நிலைக்கு உயர்த்தி, திவ்ய தேகம் எனும் இறுதி இலக்கிற்கு இட்டுச் செல்கிறது.

error: Content is protected !!